தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ள அதிமுக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் கடந்த வாரம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பதிலளித்த நிதியமைச்சரின் உரையை எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக்  கட்சிகள் புறக்கணித்துவிட்டன. இதனால் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சிகள் வரிசை வெறிச் சோடி விட்டது. அநேகமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களே பங்கேற்காமல் ‘நமக்கு நாமே’ என்று ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே நிதியமைச்சர் உரையாற்றியிருக்கிறார். சட்டமன்றத்தின் அண்மைக்கால வரலாற்றில் இப்படி  நிகழ்ந்ததில்லை எனலாம். நிதியமைச்சரின் உரையைப் புறக்கணிக்கும் அளவுக்கு இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் என்பதே திமுக, அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவைதான் என்றாகிவிட்டதையும் மனதில் கொள்ள வேண்டும்.

சட்டமன்ற விவாதங்களில் பெரும் பகுதியை ஆக்கிரமித்தது தலைவர்கள் துதியும் தனிநபர் பெருமைகளுமே. அவையில் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிட்டுப் பேசலாமா கூடாதா என்பதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று சொல்லலாமா கூடாதா என்பதும் மிகப்பெரிய மக்கள் பிரச்சனையாக முக்கால் மணி நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய பேரவைத் தலைவர் அமைச்சரின் பேச்சை அனுமதித்ததும் சர்ச்சையாகியுள்ளது. அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது என்பது இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டது. எந்த அளவுக்கு  விவாதத்தில் அரசியல் நாகரிகம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். நிதியமைச்சரின் உரையைப் புறக்கணித்துவிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தோழமைக் கட்சியினரும் வெளியே சென்ற பின்னர் அவர்கள் தம்மை ஒருமையில் பேசியதாகவும் இழிவுபடுத்தியதாகவும் பேரவைத் தலைவர் அவையிலேயே புகாரை முன்வைக்கிறார். எதிர்க்கட்சியின் இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால் சட்டமன்ற விதிகளைப் பயன்படுத்தப் போவதாக அவர் கூறியிருப்பது ‘வானளாவிய’ அதிகாரம் பற்றிப் பேசப்பட்டதைத்தான் நினைவூட்டுகிறது. அசைக்க முடியாது என்ற கர்வத்தோடு ஆளுங்கட்சியினரும், பலம் வாய்ந்தவர்களாக இருக்கிற நினைப்பில் எதிர்க்கட்சியினரும் மோதிக் கொள்வது சொந்தப் பெருமைகளின் மேன்மை, கீழ்மையை ஆராய்வதாகத்தான் இருக்கிறது.

நாடு இன்றிருக்கும் நிலையில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கு எதிரான வன்மங்கள், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மத்திய அரசின் வஞ்சக செயல் திட்டங்கள், மதுக்கடை பிரச்சனைகள், மக்கள் நடமாடவே அஞ்சும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவை குறித்த விவாதங்கள் வந்து விடாமல் இருப்பதில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது. உறுப்பினர்கள் தங்கள் பலத்தை மட்டும் மனதில் வைத்து மல்லுக்கட்டுவது மக்களுக்கு உதவுமா என்பது கேள்விக் குறியே. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் காலமும் இதே திசையில் செல்லுமானால் மொத்தத்தில் அது  வாக்களித்த மக்களை கேலி செய்வதாகவே இருக்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.