சென்னை, ஜூலை 17-

கோயம்பேடு – ஷெனாய் நகர் இடையே  அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் சனிக்கிழமையன்று( ஜூலை 16) மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்ணாரப் பேட்டையிலிருந்து விமான நிலையம் வரையும் சென்ட்ரலிலிருந்து புனித தோமையார் மலை வரையும் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்க பாதையிலும், 21 கி.மீ. தூரம் மேம்பாலத்திலும் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் பணிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரயில் பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. 2016 ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மெதுவாக பணிகள் நடை பெற்றதால் 50 விழுக்காடு பணிகள் முடிவடையாமல் உள்ளது.

முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த வழித் தடத்தில் பயணம் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால் எதிர்பார்த்த மக்கள் கூட்டம் இல்லை.

இந்நிலையில், 2வது கட்டமாக சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி, கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரை சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பணிகளை முடித்து பயணிகள் ரயில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டனர். தற்போது  கோயம்பேடு-திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர் இடையே சுமார் 6 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையில் தண்டவாளம், மின் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து முதன் முதலாக சுரங்கப் பாதையில் கோயம்பேடு- ஷெனாய் நகர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமையன்று( ஜூலை 16) நடைபெற்றது. சோதனை ஓட்ட மெட்ரோ ரயிலில் அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் பயணம் செய்தனர். இந்த பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.