மதுரை, ஏப்.11-
மதுரை கூடல்நகர் அருகே உள்ள அஞ்சல் நகரில் வசித்துவரும் சுங்க இலாகா அதிகாரி ஒருவர் வீட்டிலிருந்து 30 பவுன் நகை மற்றும் ரூ. 4 லட்சம் ரொக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை அருகே உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முருகானந்தம். கேபிள் டி.வி. நடத்தி வரும் இவரிடம் மதுரை சுங்கவரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கிருஷ்ணன், அசோக்ராஜ் ஆகிய இருவரும் ரூ.75 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் சிபிஐ-யிடம் புகார் தெரிவித்தார். சம்பவத்தன்று சுங்க வரித்துறை அலுவலக வளாகத்தில் அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகியோரிடம் முருகானந்தம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் பாலச்சந்திரன், முருகன் ஆகிய இருவரையும் கையும், களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிய விட்டு லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுடன் தப்பிச் சென்றது. தாக்குதலில் காயமடைந்த சிபிஐ அதிகாரிகள் பாலச்சந்திரன், முருகன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 45 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் லஞ்சம் பெற்ற சுங்க இலாகா அதிகாரி அசோக்ராஜின் அஞ்சல்நகர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
-நமது நிருபர்

Leave a Reply

You must be logged in to post a comment.