சென்னை, டிச. 30 –
மனித உரிமைகளுக்காகவும், எளிய மக்களுக்கு நீதி கிடைக்கவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மறைந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரில் ஆண்டுதோறும் சிறந்தகல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு விருது வழங்கும் விழா வரும் ஜனவரி 2 அன்று சென்னையில் நுங்கம் பாக்கம் ரட்லாண்ட் கேட் சாலையில் (தாஜ் ஹோட்டல் எதிரில்) உள்ள ஆஷா நிவாஸ் அரங்கில் நடைபெறவுள்ளது.நீதியரசன் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் நூற்றாண்டை யொட்டி, நீதி, ஊடகம், திரைத்துறை, சமூகம் என பல பிரிவுகளில் 100 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரையை மையமாக கொண்டு செயல்படும் சோக்கோ அறக்கட்டளை விருதுபெறுவோர் பட்டியலை அறிவித்துள்ளது.
இந்த விருதுகள் 4 மையங்களில் வழங்கப்படவுள்ளது. சென்னையில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி, முனைவர் வே.வசந்திதேவி, எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, பேரா.அ.மார்க்ஸ், மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, கவிஞர் இன்குலாப், ஃபிரண்ட் லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், தீக்கதிர் சென்னை பதிப்பு பொறுப்பாசிரியர் அ.குமரேசன், தமிழ் இந்து ஆசிரியர் கே.அசோகன், பத்திரிகையாளர்கள் மனா, ஏ.பழனியப்பன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, திரைப்பட இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், எஸ்.பி.ஜனநாதன், டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத் உள்ளிட்ட 38 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமைநிதிபதி டி.முருகேசன் வழங்க உள்ளார். காவல்துறை முன்னாள் உயர் அதிகாரி வி.ஆர்.லட்சுமி நாராயணன் , சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மதுரையில் நடைபெறும் விழாவில் பேரா. அருணன், எஸ்.ஏ.பெருமாள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.