தமிழகத்தின் வரலாற்றில் சமணர்களுக்கு என்று ஒரு இடம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தில் சமணமதம் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் நுழைந்திருக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கூறிவருகிறார்கள்.. சங்க காலத்தில் சமணம் தமிழகத்தில் செழித்தோங்கி இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் ஒரு சமணர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திருவள்ளுவரும் சமணர் என்று தமிழ் அறிஞர்கள் திரு.வி.க., வையாபுரி பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் அழுத்தமாகக் கூறுகின்றனர். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்று இலக்கியங்களும் சமணர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரம் காலத்தில் தமிழகத்தில் சமணம், பௌத்தம், சைவம் ஆகிய மூன்று மதங்களும் செழிப்புடன் இருந்தன என்று சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது. கண்ணகியும்,கோவலனும் சமணர்கள்தான். மதுரையில் கி.பி.604ம் ஆண்டில் சங்கா என்று அழைக்கப்பட்ட சமண கூடுகை நிரந்தரமாக இருந்து வந்தது. இதுதான் மதுரையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கத்துக்கு அடித்தளமாக இருந்திருக்க வேண்டுமென்று ஜார்ஜ் எல்.ஹார்ட் கூறுகிறார். சமணமதத்துக்கும், சைவமதத்துக்கும் நிலவிய போட்டியில் சைவம் தமிழ் மூவேந்தர்களை தன் வசம் இழுத்துக்கொண்டது . இருப்பினும், சாளுக்கியர்கள், பல்லவர்கள் சமணமதத்தை அணைத்துக் கொண்டனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சமணம் தமிழகத்தில் பெருமை இழக்கத் தொடங்கியது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 83 ஆயிரத்து 359 சமணர்கள் இருப்பதாக தெரிய வருகிறது. இது தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையான 7கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேரில் வெறும் 0.12 விழுக்காடுதான். இவர்களில் 68,587 பேர் கல்வியறிவு படைத்தவர்கள். இவர்களில் சிறுபகுதியினர் விவசாயிகள் ஆவர். பெரும்பாலானவர்கள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் நகரங்களில் குடியேறி பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். தமிழ் மக்களுக்கு சமணர்கள் (ஜைனர்கள், ஜெயின்ஸ் ) என்றால் உடனே ராஜஸ்தானிகளும், குஜராத்திகளும்தான் கவனத்துக்கு வருகிறார்கள். சமணர்கள் என்றால் வடக்கே இருந்து வந்தவர்கள் என்று தென்னிந்தியர்கள் கருதுகின்றனர் என்று பெங்களூர் பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரியும் வந்தவாசியைச் சேர்ந்த தமிழ் சமணர் பார்ஸ்வந்த் விசனப்படுகிறார். சக ஆசிரியர்கள் இவர் சமணர் என்று தெரிந்தவுடன் வியப்புடன் நீங்கள் எப்படி சமணர் ஆனீர்கள்? நீங்கள் மார்வாரி இல்லை.
நீங்கள் ஒரு தென்னிந்தியர். நீங்கள் எப்போது மதம் மாறினீர்கள் என்று கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் இல்லை, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தமிழ் சமணர்கள் என்ற வார்த்தை அறிமுகமாகவில்லை என்பதுடன் இவர்களுக்கு தமிழகத்தின் வரலாற்றில் சமணர்களுக்கிருந்த வரலாறு கூறப்படவில்லை. தமிழ் சமணர்கள் தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். அவர்கள் பொது வாழ்வில் பிரகாசிக்கவில்லை. அவர்களுடைய நிலங்களும் தரிசாக கிடப்பதால் அவர்கள் நகரங்களுக்கு குடியேறி வருகிறார்கள். வட இந்திய சமணர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வதால் தமிழகமெங்கும் அறியப்பட்டுள்ளார்கள். இவர்களின் எண்ணிக்கை தமிழக சமணர்களை விட அதிகமாக உள்ளது. அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவதுடன் அறக்காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சென்னையில் மட்டும் 100 சமணக்கோவில்களை கட்டியுள்ளார்கள். இவர்கள் கட்டிய கோவில்கள் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டவை. தமிழ் சமணர்களின் கோவில்கள் திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவில்கள். வாழ்வுக்காக தமிழ் சமணர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக போராடி வருகிறார்கள் என்று தமிழ் சமணப்பள்ளி ஆசிரியர் ஜெயராஜன் கூறுகிறார்.
இவர்கள் ஓரங்கட்டப்பட்டதற்கு பொருளாதாரம் மட்டும் காரணம் அல்ல. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட சைவ, சமண முரண்பாடுகள் முதல் இவர்களை ஓரங்கட்டும் பணி தொடங்கி விட்டது. சமணர்கள் தமிழ்க்கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்ற கருத்து தமிழர்களின் மண்டையில் திணிக்கப்பட்டு விட்டது. பிற்கால சோழர்கள், பல்லவர்கள் ஆகியோர் சைவ மதத்தை தங்களது ஆதிக்கத்துக்கு பயன்படுத்தி அதை வளர்த்து விட்டனர். சமணமதத்தை பன்முகத்தன்மை கொண்ட தமிழ்பண்பாட்டை விட்டு ஒதுக்குவதில் அரசுகளுக்கும் ஆர்வம் இருந்தது. இதன் விளைவாக இன்றும் தமிழ் சமணர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் வாழும் சமணர்களில் தமிழ் சமணர்களும் இருக்கின்றனர் என்பதை தமிழர்கள் மறந்து விடக்கூடாது.

Leave a Reply

You must be logged in to post a comment.